மாமல்லபுரம் அருகே உள்ள பட்டிப்புலம் ஊராட்சியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இப்பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பட்டிப்புலம் ஊராட்சியின் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குழாய்கள் வழியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கெங்கையம்மன் கோயில் தெருவில் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், பின்னர் அதே பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மழைநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. கால்வாயின் அடிப்பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட சேதம் காரணமாக, கடந்த ஆறு மாதங்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் குடிநீரில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், குடிப்பதற்கும் அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை குறித்து 6வது வார்டு உறுப்பினர் அருண், மாவட்ட ஆட்சியர் மற்றும் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை என கூறப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் சேதமடைந்த குழாய்களை அவ்வப்போது சரிசெய்தாலும், மீண்டும் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் நிலை தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, குடிநீர் குழாய் பாதையை முழுமையாக ஆய்வு செய்து சேதமடைந்த பகுதிகளை மாற்றி அமைத்து, பாதுகாப்பான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.













