மதுராந்தகம் இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளை செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1,200 காவலர்களும், தேர்தல் பணிகளுக்காக 1,368 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமை தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.வீரப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தல் தொடர்பான கண்காணிப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.வீரப்பன், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, தேர்தல் பொது மேற்பார்வையாளராக போர்சிங் யாதவ், காவல் மேற்பார்வையாளராக கிரிஜா சங்கர் ஜெய்ஸ்வால் மற்றும் தேர்தல் செலவின மேற்பார்வையாளராக மருத்துவர் வாவ்ல் வைபவ் பாலாசாகேப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிப்பதற்காக இதுவரை 9 பறக்கும் படை குழுக்கள், 9 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 காணொளி கண்காணிப்பு குழுக்கள் மற்றும் ஒரு காணொளி பார்வைக் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,13,767 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,04,916 பேர் ஆண் வாக்காளர்கள், 1,08,786 பேர் பெண் வாக்காளர்கள் மற்றும் 65 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆவர். மேலும், 2,540 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதிற்கு மேற்பட்ட 22 வாக்காளர்களும், 27 பணி வாக்காளர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் மொத்தம் 167 வாக்குச்சாவடி அமைவிடங்களில் 285 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு மற்றும் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான காவல் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 1,200 காவலர்களும், தேர்தல் பணிகளில் 1,368 அலுவலர்களும் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான எம்.வீரப்பன் தெரிவித்தார்.
#மதுராந்தகம் #மதுராந்தகம்_இடைத்தேர்தல் #இடைத்தேர்தல் #செங்கல்பட்டு #தேர்தல் #தேர்தல்_பாதுகாப்பு #காவல்துறை #வாக்காளர்கள் #வாக்குச்சாவடி #தேர்தல்_கண்காணிப்பு












