கிழக்கு தாம்பரத்தில் பணியில் இருந்த இரு போக்குவரத்து காவலர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் முகுந்த் வரதராஜன் சாலை அருகே போக்குவரத்து காவல்துறையின் கண்காணிப்பு பூத் உள்ளது. அங்கு போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மதன் மற்றும் போக்குவரத்து காவலர் ஜலேந்திரன் உள்ளிட்ட காவலர்கள் பணியில் இருந்துள்ளனர்.
காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் நகருக்குள் செல்லக்கூடாது என்ற நடைமுறையின்படி, காவலர் ஜலேந்திரன் சாலையில் வந்த லாரியை வழிமறித்து சாலையோரமாக நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் காலை உணவு அருந்துவதற்காக அங்கிருந்து சென்றுள்ளார்.
இதற்கிடையில், கண்காணிப்பு பூத்தில் பணியில் இருந்த போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் மதன், அந்த லாரியை அங்கிருந்து செல்ல அனுமதித்ததாக கூறப்படுகிறது.
உணவு அருந்திவிட்டு திரும்பி வந்த காவலர் ஜலேந்திரன், தான் நிறுத்தி வைத்திருந்த லாரி அனுப்பப்பட்டதற்கான காரணம் குறித்து சிறப்பு உதவி ஆய்வாளர் மதனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், இந்த காட்சியை அப்பகுதியில் இருந்தவர்கள் செல்போனில் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
மேலும், யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் லாரி அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பொதுமக்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநிறுத்தும் பொறுப்பில் உள்ள காவல்துறையினரே பொதுவெளியில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
#கிழக்கு_தாம்பரம் #தாம்பரம் #போக்குவரத்து_காவலர்கள் #காவல்துறை #காவலர்கள்_வாக்குவாதம் #வாக்குவாதம் #வீடியோ_வைரல் #சமூக_வலைத்தளம் #லாரி #சென்னை












