திமாவரம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் ராம்ப்கள், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்டம் திமாவரம் பகுதியில் புதிதாக லேஅவுட் அமைக்கப்பட்டு, அதில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இதே பகுதியில் ஸ்ரீராம் என்பவரும் சொந்தமாக வீடு கட்டி வசித்து வருகிறார்.
குடியிருப்புப் பகுதியில் உள்ள பிரதான சாலை 23 அடி அகலம் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள சில வீட்டு உரிமையாளர்கள் தங்களது கார்களை போர்டிகோவிற்குள் எளிதாக கொண்டு செல்வதற்காக, வீடுகளுக்கு முன்பிருந்த சாலையின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து சிமெண்ட் ராம்ப்களை அமைத்திருந்தனர்.
இதனால் சாலையின் அகலம் குறைந்து, அப்பகுதியில் வாகனங்களை எளிதாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டதுடன், போக்குவரத்துக்கும் கடும் இடையூறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ராம்ப்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ராம்ப்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ராம்ப்களை உடனடியாக அகற்றுமாறு செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்பேரில் செங்கல்பட்டு தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திமாவரம் பகுதிக்கு சென்றனர்.
அங்கு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த அனைத்து ராம்ப்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அதிரடியாக இடித்து அகற்றினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் நடைபெற்ற இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையால் திமாவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#திமாவரம் #செங்கல்பட்டு #ஆக்கிரமிப்பு #ராம்ப்கள் #ஆக்கிரமிப்பு_அகற்றம் #சென்னை_உயர்நீதிமன்றம் #நீதிமன்ற_உத்தரவு #சாலை_ஆக்கிரமிப்பு #போக்குவரத்து #வருவாய்த்துறை













