Advertisement

பொத்தேரி: தனியாக வீட்டில் தூங்கிய மாணவர் – உள்ளே நுழைந்தவர் செய்த வேலை

பொத்தேரி அருகே கல்லூரி மாணவர் வீட்டிற்குள் புகுந்து விலை உயர்ந்த ஆப்பிள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை திருடிச் சென்ற இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பொத்தேரி அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஆறுமுகம். சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில் தனது வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து, அங்கிருந்த விலை உயர்ந்த ஆப்பிள் லேப்டாப் மற்றும் ஸ்மார்ட்போன்களை திருடிக் கொண்டு தப்பிச் சென்றார்.

Advertisement

காலையில் எழுந்து பார்த்தபோது லேப்டாப் மற்றும் செல்போன்கள் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர் ஆறுமுகம், உடனடியாக மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மறைமலைநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் திருட்டு நடைபெற்ற பகுதியைச் சுற்றியுள்ள 150-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

Advertisement

இதில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், திருட்டில் ஈடுபட்டது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ராகவன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆம்பூருக்கு விரைந்த தனிப்படை போலீசார் ராகவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில், ராகவன் மீது ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட ராகவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், அவரிடம் இருந்து திருடப்பட்ட ஆப்பிள் லேப்டாப் மற்றும் விலை உயர்ந்த செல்போன்களை மீட்டனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement