மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தும் அலுவலராக மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் நரேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது.
மதுராந்தகம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 285 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. தொகுதியில் 2,13,689 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,04,886 ஆண் வாக்காளர்களும், 1,08,738 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர்.
தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் 9 பறக்கும் படைகளும், 9 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. சட்டவிரோதமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தனியார் இடங்களில் உள்ள அனுமதியற்ற அரசியல் விளம்பரங்களையும் 72 மணி நேரத்திற்குள் அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடத்துதல், ஒலிபெருக்கி பயன்படுத்துதல், வாகனங்கள் மற்றும் ஊர்வலங்களுக்கு அனுமதி பெறுதல், தற்காலிக கட்சி அலுவலகங்கள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் SUVIDHA செயலி மூலம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் C-Vigil செயலி மற்றும் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம்.
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை தொலைபேசி மூலம் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க 1950, 1800-425-7088 மற்றும் 044-27427412 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
#மதுராந்தகம் #மதுராந்தகம்_இடைத்தேர்தல் #இடைத்தேர்தல் #செங்கல்பட்டு #தேர்தல் #வேட்புமனு #தேர்தல்_நடத்தை_விதிமுறைகள் #வாக்குப்பதிவு #வாக்கு_எண்ணிக்கை #தேர்தல்_ஆணையம்













