சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே தோழியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி வாகனத்தைப் பறித்துச் சென்ற கும்பலைச் சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட 4 பேரைச் சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
செங்கல்பட்டில் தங்கி அங்குள்ள ஒரு துணிக்கடையில் பணிபுரிந்து வரும் சரவணன் (20) என்ற இளைஞர், இரவில் தனது தோழியுடன் கூடுவாஞ்சேரியிலிருந்து செங்கல்பட்டு நோக்கி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் அருகே அவர்கள் வந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பல் இவர்களைத் திடீரென வழிமறித்தது. அக்கும்பல் சரவணன் மற்றும் அவரது தோழியைச் சூழ்ந்துகொண்டு, கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து அவரிடமிருந்த வாகனத்தைப் பறித்துக்கொண்டு தப்பியோடியது. முக்கியப் பகுதியான நெடுஞ்சாலையிலேயே, அதுவும் பெண் ஒருவர் உடன் இருக்கும்போதே குற்றவாளிகள் இவ்வளவு துணிச்சலாக வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தீவிர போலீஸ் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகள் இருக்க வேண்டும் என்பது விதியாகும். ஆனால், சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் முறையான போலீஸ் பாதுகாப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் புகலிடமாக இந்தச் சாலைகள் மாறி வருவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர். சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுக்கும் காவல்துறை, குற்றங்கள் நடக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், இரவு நேர ரோந்து பணிகளையும் ஏன் தீவிரப்படுத்துவதில்லை என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட சரவணன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்கப்பெருமாள் கோவில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதனடிப்படையில், வழிப்பறியில் ஈடுபட்ட ரோகித் (19), ரஜினி (19), ஆகாஷ் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 பைக்குகள் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கைது நடவடிக்கையோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என எண்ணாமல், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரப் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்யத் தாம்பரம் மாவட்ட காவல்துறை உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













