Advertisement

10ம் வகுப்பு தேர்வில் 2ம் இடம்: மாணவியை பாராட்டிய முன்னாள் அமைச்சர்

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 2வது இடத்தையும், செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதலிடத்தையும் பிடித்த மாணவி யாழினிக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கலைமாமணி விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் தமிழறிஞரான கே.பி. அறிவானந்தத்தின் பேத்தியான யாழினி, 2026ஆம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று கல்வித்துறையில் சாதனை படைத்துள்ளார். அவரது இந்த வெற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

மாணவி யாழினியின் இந்த சாதனையை பாராட்டும் விதமாக, திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் இன்று (மே 30) அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது மாணவிக்கு பட்டாடை அணிவித்து கவுரவித்ததுடன், சாக்லேட் மாலை அணிவித்து தனது பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், எதிர்கால கல்விப் பயணத்திலும் இதேபோன்ற அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மேலும் பல உயரங்களை எட்ட வேண்டும் என வாழ்த்தினார்.

Advertisement

இந்த நிகழ்வில் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர். யாழினியின் சாதனை செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்ததோடு, மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ள யாழினியின் வெற்றி, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அவரது இந்த சாதனை, எதிர்கால மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement