கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கும்பகோணத்திற்கு செல்லும் பேருந்துகள் நீண்ட நேரமாக இயக்கப்படவில்லை எனக் கூறி, பொதுமக்கள் போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இதற்காக தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து பல்வேறு தென் மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டனர்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை முதல் கும்பகோணத்திற்கு செல்லக்கூடிய பேருந்துகள் சுமார் 3 மணி நேரமாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர். பேருந்துகளுக்குள் அமர்ந்து நீண்ட நேரமாக காத்திருந்ததாகவும், பேருந்துகள் எப்போது புறப்படும் என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இருந்து உரிய பதில் தெரிவிக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குமுறினர்.
மேலும், பேருந்துகள் இயக்கப்படும் சரியான நேரம் குறித்தும், உரிய அறிவிப்புகள் குறித்தும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்துத்துறை பூத்தில் அதிகாரிகள் யாரும் இல்லாததால், தங்களது சொந்த ஊர்களுக்கு எவ்வாறு செல்வது என தெரியாமல் தவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ள வந்த போக்குவரத்துத்துறை செயலாளர் நிர்மல் ராஜை, பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களது பிரச்சினைகளை தெரிவித்தனர். அப்போது பேருந்துகள் இயக்கப்படாதது மற்றும் உரிய தகவல்கள் வழங்கப்படாதது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
#கிளாம்பாக்கம் #கிளாம்பாக்கம்பேருந்து #கும்பகோணம் #கும்பகோணம்பேருந்து #பேருந்துநிலையம் #அரசுபேருந்து #போக்குவரத்து #போக்குவரத்துத்துறை #நிர்மல்ராஜ் #ஐஏஎஸ் #பயணிகள் #பொதுமக்கள் #பேருந்துசேவை #தொடர்விடுமுறை #சென்னை #தாம்பரம் #பெருங்களத்தூர் #வண்டலூர் #பயணிகள்பிரச்சனை #பேருந்துநேரம்












