Advertisement

“வருண பகவானே மனமிரங்கு!” – செங்கல்பட்டில் மழை வேண்டி மகளிர் குழுவினர் சிறப்பு யாகம்!

செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறையாத நிலையிலும், கடுமையான நிலத்தடி நீர் பற்றாக்குறையைத் தொடர்ந்து, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் மழை வேண்டி மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சிறப்பு யாகம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து குளுமை நிலவி வரும் சூழலில், செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களில் சிறிதளவுகூட மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, பொதுமக்கள் அன்றாடக் குடிநீருக்கே அல்லாடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், கோடைக்காலம் முடிந்தும் தணியாத வெப்பத்தில் இருந்து நிவாரணம் பெறவும், விவசாயம் மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கவும் மழை வேண்டி சிங்கப்பெருமாள் கோயில் பாரேரி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு துலுக்கானத்தம்மன் திருக்கோயிலில் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஊராட்சி அளவிலான முழு கூட்டமைப்பு, பாரேரி குடியிருப்பு மன்றம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து இந்த சிறப்பு யாகத்தை முன்னெடுத்தனர். கோயிலில் புனித யாக குண்டம் அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க அம்மனுக்குச் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடத்தப்பட்டன.

Advertisement

தொடர்ந்து, வருண பகவான் மனமிரங்கி செழிப்பான மழை பொழிய வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த திரளான பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்ணீர்மல்கக் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மழை வேண்டி மகளிர் குழுவினர் நடத்திய இந்த ஆன்மீகப் பிரார்த்தனை அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement