மதுராந்தகம் இடைத்தேர்தல் தொடர்பாக தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் அவரது கணவர் குமரவேல் ஆகியோரின் தேர்தல் ஆவணங்களில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்த முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுராந்தகம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இந்தப் புகார் மனுவை அளித்துள்ளார்.
புகார் மனுவில், வேட்பாளர் மரகதம் குமரவேல் தனது முந்தைய தேர்தல் ஆவணங்களில் வயது 44 எனக் குறிப்பிட்டிருந்த நிலையில், தற்போது வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள படிவம்-26ல் வயது 43 என குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளரின் வருமானம் தொடர்பான விவரங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. 2021-22 நிதியாண்டுக்கான வேட்பாளரின் வருமானம் ஒரு ஆவணத்தில் ரூ.4,98,700 என்றும், மற்றொரு ஆவணத்தில் ரூ.6,25,480 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 2022-23 நிதியாண்டில் ரூ.4,14,500 மற்றும் ரூ.13,10,000 என வெவ்வேறு வருமானத் தொகைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர் மரகதம் குமரவேலின் கணவர் குமரவேல் தொடர்பான வருமான வரி விவரங்களிலும் முரண்பாடுகள் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே நிதியாண்டில் வெவ்வேறு வருமானத் தொகைகள் குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஒரே நபருக்கு ஒரே நிதியாண்டில் வெவ்வேறு வருமான வரி அறிக்கைகள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து, தேர்தல் ஆவணங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உண்மையான சொத்து மற்றும் வருமான விவரங்களை உறுதி செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பாடுகள் உறுதி செய்யப்பட்டால் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் மீது வயது மற்றும் வருமானவரி விவரங்களில் முரண்பாடு இருப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் மதுராந்தகம் இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#மதுராந்தகம்இடைத்தேர்தல் #மரகதம்குமரவேல் #தவெக #தமிழகவெற்றிக்கழகம் #வேட்புமனு #புகார் #தேர்தல்ஆவணம் #வருமானவரி #வருமானவரிவிவரம் #ஆவணமுரண்பாடு #மதுராந்தகம் #செங்கல்பட்டு #தேர்தல்நடத்தும்அலுவலர் #இடைத்தேர்தல் #தேர்தல்செய்திகள் #தமிழ்நாடுதேர்தல் #வேட்புமனுபரிசீலனை #சென்னை #தமிழ்நாடு #அரசியல்செய்திகள்












