Advertisement

செங்கல்பட்டு மலைக்கோவிலில் மரகத முருகர் சிலை திருட்டு – 3 பேர் கைது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெருங்கரணை கிராமத்தில் மலை மீது அமைந்துள்ள நடுபழனி பாலமுருகன் மரகத தண்டாயுதபாணி திருக்கோயிலில் திருடப்பட்ட அபூர்வ மரகத முருகர் சிலை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. சிலை திருட்டு தொடர்பாக 3 பேரை கைது செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோயிலின் மூலவராக, முழுமையாக மரகதக் கல்லால் செய்யப்பட்ட பாலமுருகன் தண்டாயுதபாணி சாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த அபூர்வ சிலை சுமார் இரண்டரை அடி உயரம் கொண்டதாகும்.

Advertisement

இந்த சிலை கடந்த 2008ஆம் ஆண்டு மைசூரைச் சேர்ந்த கணபதி சச்சிதானந்த சுவாமிகள் டிரஸ்ட் மூலம் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பில் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பங்குனி உத்திரம், சஷ்டி, தைப்பூசம் உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டிருந்த மரகத சிலைக்கு பாதுகாப்பாக 3 பெரிய கதவுகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், கோயிலுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்தால் எச்சரிக்கும் வகையில் அபாய ஒலி எழுப்பும் கருவியும், கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.

Advertisement

இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு வழக்கம்போல் பூஜைகளை முடித்துவிட்டு, பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக கோயிலுக்கு வந்தபோது கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து மூலவர் சன்னதிக்குச் சென்று பார்த்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த இரண்டரை அடி உயர மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சாமி சிலை காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மேலும், கோயிலில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிப் பொருட்களும் திருடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சித்தாமூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கோயில் முழுவதையும் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் உதவியுடனும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில் BNS சட்டப்பிரிவுகள் 331(4), 305(d) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மரகத சிலையை திருடிச் சென்றவர்களை விரைந்து கைது செய்ய, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் மேற்பார்வையில், மதுராந்தகம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தீபக் ரஜினி தலைமையில் 6 காவல் ஆய்வாளர்களை கொண்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார் கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததுடன், மர்ம நபர்கள் கோயிலுக்குள் எந்த வழியாக நுழைந்தனர், எத்தனை பேர் வந்தனர், சிலையை எவ்வாறு எடுத்துச் சென்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும், இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஏற்கனவே ஈடுபட்ட பழங்குற்றவாளிகளின் பட்டியலையும் ஆய்வு செய்த போலீசார், 20க்கும் மேற்பட்ட பழங்குற்றவாளிகளை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கிடைத்த பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் சிலை திருட்டில் தொடர்புடையவர்களை போலீசார் அடையாளம் கண்டனர்.

இதையடுத்து சித்தாமூர் காவல் ஆய்வாளர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார், கடந்த 13ஆம் தேதி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, சிலை திருட்டில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கோயிலில் இருந்து திருடப்பட்ட அபூர்வ மரகத பாலமுருகன் தண்டாயுதபாணி சாமி சிலையையும் போலீசார் மீட்டனர்.

மீட்கப்பட்ட சிலையை மீண்டும் கோயிலில் பிரதிஷ்டை செய்து, பக்தர்கள் வழிபாட்டுக்கு கொண்டு வருவது தொடர்பாக கோயில் நிர்வாகத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 3 பேருடன் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, கோயிலில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் வெள்ளிப் பொருட்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டன, திருட்டு சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைக்கோயிலில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் அபூர்வ மரகத முருகர் சிலை திருடப்பட்ட சம்பவம் பெருங்கரணை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், வழக்கில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டு கைது செய்து, திருடப்பட்ட மரகத முருகர் சிலையை மீட்ட தனிப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

#மரகதமுருகர்சிலை #மரகதசிலை #முருகர்சிலை #சிலைதிருட்டு #சிலைமீட்பு #செங்கல்பட்டு #மதுராந்தகம் #சித்தாமூர் #பெருங்கரணை #மலைக்கோவில் #முருகன்கோவில் #பாலமுருகன் #தண்டாயுதபாணி #கோவில்திருட்டு #3பேர்கைது #காவல்துறை #தனிப்படை #சிசிடிவி #தமிழ்நாடுசெய்திகள் #செங்கல்பட்டுசெய்திகள்

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement