Advertisement

“ஜனநாயகன் படம் பார்த்து அழுதது தப்பா?” – விக்கிரமராஜா கொடுத்த பதில்!

கரூர் சம்பவத்தின் போது இவர்கள் யாரும் அமைச்சர்களாக இல்லை; மேலும் ஒரு பிரபல நடிகரின் கடைசித் திரைப்படம் என்பதால் உணர்ச்சிப் பெருக்கில் அழவது மனித இயல்புதான் என ‘ஜனநாயகன்’ திரைப்படச் சர்ச்சை குறித்துத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா விளக்கமளித்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவ மருத்துவப் பணியாளர்களின் உறவினர்களுக்கான பிரத்யேகக் காத்திருப்பு அறையின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா ரிப்பன் வெட்டி அறையைத் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு முக்கிய அரசியல் மற்றும் வணிகர் சார்ந்த பிரச்சினைகள் குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, “நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்களும் பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து தீவிரமாகப் போராடி வருகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்பதைத் தமிழக அரசும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது இந்தியா முழுவதும் மிகப்பெரிய எதிர்வினையை எழுப்பியுள்ளது. எனவே, அகில இந்திய அளவில் பாரதப் பிரதமர் அவர்கள் இதற்கொரு நல்ல தீர்வைக் காண வேண்டும். மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்குத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை முழு ஆதரவையும் அளிக்கும். அரசுத்தரப்பில் அடக்குமுறைகள் இருக்கக் கூடாது; அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களும் பொதுச் சொத்துக்களுக்கு எந்தச் சேதமும் ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் போராட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து காவல்துறை நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், “காவல்துறை அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் உண்மையான கடைகளை விட்டுவிட்டு, வியாபாரம் செய்யாத கடைகளுக்குள் புகுந்து பொய் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். சாமானிய வியாபாரிகளை அச்சுறுத்தி பலியாக்கக் கூடாது. காவல்துறை வணிகர்களிடம் சகோதரனைப் போலச் செயல்பட வேண்டும்; மாறாக, அடக்குமுறையைக் கையாண்டால் அதை எதிர்த்துப் போராட தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஒருபோதும் தயங்காது” எனப் பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

மேலும், பாமக உள்கட்சி நிலைமை குறித்துப் பேசுகையில், “மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கட்சியின் பொறுப்புகளைத் தன் மகனான அன்புமணி ராமதாஸ் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு விடைபெறுகிறார் என்றால் அது வரவேற்கத்தக்க நல்ல செய்தி. அன்புமணி ராமதாஸ் அவர்கள் கட்சியைச் சிறப்பாக வழிநடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார்.

இறுதியாக, “கரூரில் 41 பேர் இறந்தபோது அழாத அமைச்சர்கள், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்த்து அழுகிறார்களே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “கரூர் சம்பவம் நடைபெற்ற காலகட்டத்தில் இவர்கள் யாரும் அமைச்சர்களாக இல்லை. மேலும், அது ஒரு பிரபல நடிகரின் கடைசித் திரைப்படம் என்பதால் அந்த உணர்ச்சிப் பெருக்கில் அவர்கள் கண் கசங்கியிருக்கலாம். முந்தைய காலகட்டங்களில் கூட கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திரைப் படங்களைப் பார்த்து அவருடைய கட்சித் தோழர்கள் கண் கலங்கியதை நாம் பார்த்திருக்கிறோம். உணர்ச்சிகள் என்பது மனித இயல்புதான்” என விளக்கம் அளித்தார்.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement