Advertisement

‘ஜனநாயகன்’ ரிலீஸில் தொடரும் இழுபறி: தணிக்கை வாரியம் பிடிவாதம்!

நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகச் சட்டமன்றத் தேர்தல் கடந்த வாரம் (ஏப்ரல் 23) முடிந்த நிலையில், படம் உடனடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்குத் தணிக்கை வாரியத்தின் தற்போதைய முடிவு சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது.

விஜய்யின் அரசியல் வருகை மற்றும் சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, படத்தின் தணிக்கை சான்றிதழ் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் சிக்கல் தீரும் எனத் தயாரிப்பு நிறுவனம் எதிர்பார்த்தது. ஆனால், “படத்தை மீண்டும் ஒருமுறை முழுமையாகத் தணிக்கைக் குழுவினர் பார்த்த பிறகே சான்றிதழ் வழங்க முடியும்” என்று பிடிவாதம் காட்டுவதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி படத்தின் சில காட்சிகள் மற்றும் முழுத் திரைப்படமும் இணையத்தில் கசிந்த விவகாரம் தயாரிப்பு தரப்பிற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி, மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் எனத் தெரிகிறது. ஆனால், மே 14-ஆம் தேதி ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இதனால் ‘ஜனநாயகன்’ படத்தை மே 15-க்கு முன்பாக வெளியிட வாய்ப்புகள் குறைவு. எனவே, தணிக்கை சான்றிதழ் கையில் கிடைத்த பிறகு, மே 22 அல்லது மே 29 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் ‘ஜனநாயகன்’ திரைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தயாரிப்பு நிறுவனம் முறையான சான்றிதழ் கிடைக்கும் வரை மௌனம் காக்க முடிவு செய்துள்ளது.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement