Advertisement

வியட்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் நிதியுதவி!

வியட்நாமில் நேரிட்ட பயங்கர படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த 15 இந்தியர்களின் குடும்பங்களுக்குத் தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று உள்நாட்டு மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான லாவா இன்டர்நேஷனல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான மற்றும் துயரமான சூழ்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களுக்குப் பக்கபலமாகத் துணை நிற்போம் என்றும் நிறுவனம் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான லாவா, தங்களது நிறுவனத்தின் விற்பனையைச் சிறப்பான முறையில் உயர்த்திய முகவர்கள் (டீலர்கள்) மற்றும் ஊழியர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் வகையில் வியட்நாட்டின் பிரபல சுற்றுலாத் தலமான ஃபூ குவோக் தீவிற்கு இன்பச் சுற்றுலா அழைத்துச் சென்றிருந்தது. கடந்த சனிக்கிழமையன்று அங்கிருந்த ஹோன் மே ரூட் தீவிலிருந்து கரைக்குத் திரும்பியபோது, 32 இந்தியப் பயணிகள் மற்றும் 4 உள்ளூர் ஊழியர்களுடன் சென்ற சொகுசு விசைப்படகு திடீரென வீசிய ராட்சத அலைகளால் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் என மொத்தம் 15 இந்திய முகவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

இந்த கோர விபத்து குறித்து லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தங்களது வர்த்தகக் குடும்பத்தைச் சேர்ந்த மதிப்புமிக்க உறுப்பினர்களை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாத பெருந்துயரம் என்று வேதனை தெரிவித்துள்ளது. மனிதநேய அடிப்படையில், முற்றிலும் தன்னார்வமாக இந்த 25 லட்சம் ரூபாய் நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகவும், உரிய ஆவணச் சரிபார்ப்புகளுக்குப் பிறகு இந்தத் தொகை நேரடியாக அவர்களது குடும்பத்தாரிடம் போய்ச் சேர உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் லாவா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் விமானம் மூலம் தாயகம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், லாவா நிறுவனத்தின் இந்த உடனடி நிதியுதவி அறிவிப்பு, தவிப்பில் இருக்கும் குடும்பத்தினருக்குச் சற்றே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement