Advertisement

வாயலூர் தடுப்பணையில் ஆபத்தான குளியல்; நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள வாயலூர் தடுப்பணை நீர்தேக்க பகுதியில் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் குளித்து வருவது கவலைக்கிடமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் உயிரிழப்பு அபாயம் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கல்பாக்கம் அடுத்த வாயலூர் மற்றும் கடலூர் பகுதிகளுக்கு இடையே பாலாறு கடலில் கலக்கும் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தடுப்பணை அமைக்கப்பட்டது. மழைக்காலங்களில் ஆற்றில் வரும் நீர் இந்த தடுப்பணையில் தேங்கி நீர்தேக்கமாக மாறுகிறது. பல மாதங்கள் நீர் தேங்கி இருப்பதால் இப்பகுதி இயற்கை எழிலுடன் காட்சியளிக்கிறது.

Advertisement

இதனால் புதுச்சேரி – மாமல்லபுரம் சாலை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தடுப்பணை பகுதிக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களில் ஏராளமான இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் இங்கு வந்து குளித்து மகிழ்கின்றனர்.

ஆனால், நீர்தேக்கத்தில் பல இடங்களில் ஆழமான பள்ளங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதை அறியாமல் நீரில் இறங்கும் சிலர் பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

மேலும் சில இளைஞர்கள் மது அருந்திவிட்டு நீரில் இறங்குவதால் ஆபத்து மேலும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபோன்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் போதிய கண்காணிப்பு மேற்கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

எனவே, வாயலூர் தடுப்பணை பகுதியில் எச்சரிக்கை பலகைகள் அமைத்தல், பாதுகாப்பு வேலிகள் ஏற்படுத்தல் மற்றும் விடுமுறை நாட்களில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement