Advertisement

வண்டலூர் வெளிவட்ட சாலை வழிகாட்டி பலகை குழப்பம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சென்னை மற்றும் தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து பாதைகளில் ஒன்றான மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையின் இறுதிப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகைகள் தெளிவாக இல்லாததால், வாகன ஓட்டிகள் கடும் குழப்பத்தையும் விபத்து அச்சத்தையும் சந்தித்து வருகின்றனர்.

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் ஜி.எஸ்.டி சாலையை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக சென்னை துறைமுகத்திலிருந்து பொருட்களை ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள், மீஞ்சூர் – வண்டலூர் வெளிவட்ட சாலையை அதிகமாக பயன்படுத்துகின்றன. இந்த சாலை வண்டலூரில் ஜி.எஸ்.டி சாலையுடன் இணையும் பகுதியில் இடது மற்றும் வலது என இரு திசைகளாக பிரிகிறது.

Advertisement

இடது பக்கம் திரும்பினால் தாம்பரம் வழியாக சென்னை செல்லலாம்; வலது பக்கம் சென்றால் செங்கல்பட்டு வழியாக திருச்சி உள்ளிட்ட தென் மாவட்டங்களை அடையலாம். ஆனால், இந்த பிரிவை குறிக்கும் வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால், புதியதாக இந்த பாதையில் வரும் வாகன ஓட்டிகள் கடைசி நேரத்தில் திடீரென பிரேக் போட்டு வழியை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதன் காரணமாக பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன.

Advertisement

மேலும், ஜி.எஸ்.டி சாலையுடன் இணையும் பகுதியில் தேநீர் கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் முன்பு பல வாகனங்கள் சாலையோரம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. குறிப்பாக 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எப்போதும் நிறுத்தப்படுவதால், கனரக வாகனங்கள் திரும்புவதில் சிரமம் ஏற்படுகிறது.

எனவே, வெளிவட்ட சாலை முடியும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பாக பெரிய மற்றும் தெளிவான வழிகாட்டி பலகைகள் அமைக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement