Advertisement

வண்டலூரில் 3 மாதத்தில் சேதமடைந்த ரூ.9.75 லட்சம் சிமென்ட் சாலை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி பகுதியில் ரூ.9.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை, மூன்றே மாதங்களில் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தரமற்ற பணிகளால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வண்டலூர் ஊராட்சியின் 13வது வார்டில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெரு, அப்பகுதியின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வந்ததால், புதிய சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

Advertisement

இதையடுத்து, ஒன்றிணைக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட வருவாய் நிதி (PAR) திட்டத்தின் கீழ் ரூ.9.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த மார்ச் மாதத்தில் புதிய சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடைந்து மூன்று மாதங்களே ஆன நிலையில், சாலையின் மேற்பரப்பில் சிமென்ட் உதிர்ந்து ஜல்லிக்கற்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

சுமார் 20 அடி அகலமும், 120 மீட்டர் நீளமும் கொண்ட இந்த சாலை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தினமும் பயன்படுத்தும் முக்கிய சாலையாக இது உள்ளது.

Advertisement

தற்போதைய நிலையில் சாலை கரடுமுரடாக மாறியுள்ளதால், அடுத்த சில மாதங்களில் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தரமற்ற பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, சாலையை மீண்டும் தரமான முறையில் அமைக்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement