Advertisement

வல்லக்கோட்டையில் வைகாசி விசாக பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் மிக விமரிசையாகத் தொடங்கியது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்திருக்கோவில் அருணகிரியாரின் திருப்புகழ் பெற்ற புகழ்பெற்ற முருகன் தலமாகவும், கல்யாண பிரார்த்தனை தலமாகவும் பக்தர்களிடையே சிறப்பிடம் பெற்றுள்ளது.

விழாவை முன்னிட்டு அதிகாலை 3.30 மணியளவில் மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சுவாமிக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். விநாயகர் மற்றும் அஸ்திராயர் சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

அதிகாலை 4.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் ஒலிக்க முருகப்பெருமானின் சின்னம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் முருகப்பெருமான் சவுடால் சப்பரத்தில் எழுந்தருளி வல்லக்கோட்டை கிராம வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் ராஜகோபுரம், விமானங்கள் மற்றும் மண்டபங்கள் அனைத்தும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரவுள்ளார்.

Advertisement

மேலும் வரும் நாட்களில் சூரியபிரபை, சந்திரபிரபை, அன்னவாகனம், குதிரை வாகனம், மயில் வாகனம், கல்யாண உற்சவம், தீர்த்தவாரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு பரதநாட்டியம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement