Advertisement

வல்லபாக்கம்: திடீர் பள்ளம் தோண்டியதால் பரபரப்பு.

செங்கல்பட்டு மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட வல்லபாக்கம் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக முன்னறிவிப்பின்றி பள்ளம் தோண்டப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.

வல்லபாக்கம் நேரு நகர், இந்திரா நகர், சேர்க்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வாலாஜாபாத் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல இந்த ரயில்வே கேட் சாலையையே முக்கியமாக பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி பேருந்துகள், லாரிகள் மற்றும் கனரக வாகனங்களும் தினமும் இந்த சாலை வழியாக இயங்கி வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், ரயில்வே துறையினர் சுரங்கப்பாதை அமைக்க உள்ளதாக விளம்பர பலகை வைத்திருந்தனர். இதற்கு முன்பே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ரயில்வே கேட்டை மூடி சாலையில் பெரிய பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நேற்று காலை அங்கு திரண்டு ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “சுரங்கப்பாதை அமைந்தால் கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படும். மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது” என்று மக்கள் குற்றம்சாட்டினர்.

Advertisement

மேலும், “முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டதா?” என அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வாலாஜாபாத் போலீசார் மற்றும் ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, மக்கள் நடந்து செல்ல ஏதுவாக பள்ளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

இந்த சம்பவத்தால் வல்லபாக்கம் பகுதியில் 3 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement