செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில் சக தொழிலாளியை உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்த நபரை கிளாம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மாதனபள்ளி, காந்தி நகரைச் சேர்ந்த முனிராஜ் (38), கடந்த 15 ஆண்டுகளாக ஊரப்பாக்கம் சிவகாமி தெருவில் உள்ள சென்டரிங் கடையில் தங்கி வேலை செய்து வந்தார். அதே கடையில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமணன் (34) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளாக தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், இருவரும் இரவு ஊரப்பாக்கம்–காரணைபுதுச்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு தங்களது இருப்பிடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது நள்ளிரவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு, பின்னர் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன், அருகில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்து முனிராஜின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பலத்த காயமடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கிளாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முனிராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தாம்பரம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து தலைமறைவாக இருந்த லட்சுமணனை போலீசார் தேடி வந்த நிலையில், ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லட்சுமணனை செங்கல்பட்டு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.












