செங்கல்பட்டு மாவட்டம், ஆப்பூர் ஊராட்சியில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களின் ஓலைக் கொட்டகை வீடுகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாலிச் செயினை அடகு வைத்தும், வட்டிக்குக் கடன் வாங்கியும் குடிசை அமைத்ததாகக் கூறும் மக்கள், தற்போது கைக்குழந்தைகளுடன் வீடின்றி நடுத்தெருவில் நிற்பதாகக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
பல தலைமுறைகளாக வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர் ஊராட்சியில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறைகளாக வீடுகள் கட்டி வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இப்பகுதியில் சிலர் மின்சார வாரியத்தில் உரிய கட்டணம் செலுத்தி மின் இணைப்பு பெற்று வசித்து வருகின்றனர். பல குடும்பங்கள் மின் இணைப்பு வசதிகூட இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியைச் சேர்ந்த பலர் மின்சாரத் துறையில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து மின் மீட்டர்களைப் பெற்றதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், மின் இணைப்பு வழங்கப்பட்ட ஓராண்டிற்குள்ளாகவே எவ்வித முன்னறிவிப்போ, காரணமோ இன்றி அரசு அதிகாரிகள் மின் மீட்டர்களைப் பிடுங்கிச் சென்றதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
20 குடிசைகள் ஜேசிபியால் இடிப்பு
இந்நிலையில், அப்பகுதியில் பூர்வீகமாக வசித்து வருபவர்களிடம் பணம் கொடுத்து இடத்தைப் பெற்றதாகக் கூறப்படும் சுமார் 20-க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்கள், தங்குவதற்கு இடமின்றி புதிதாக ஓலைக் கொட்டகைகளை அமைத்துள்ளனர்.
இதனை அறிந்த ஆப்பூர் கிராம நிர்வாக அலுவலர், சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு முன்னறிவிப்போ அல்லது நோட்டீஸோ வழங்காமல் ஜேசிபி இயந்திரத்துடன் சென்று 20 ஓலைக் கொட்டகைகளையும் இடித்துத் தரைமட்டமாக்கியதாகக் கூறப்படுகிறது.
தங்களது குடிசைகள் கண்முன்னே இடிக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பொதுமக்கள், ஒன்றிணைந்து ஆப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பணக்காரர்களின் கட்டிடங்கள் இருக்கும்போது ஏழைகளின் குடிசைகள் மட்டும் ஏன்?
அப்போது, ஒரே சர்வே எண்ணில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளும், பணபலம் மற்றும் அரசியல் பின்புலம் கொண்டவர்களின் இரண்டு, மூன்று மாடிக் கட்டிடங்களும் இருக்கும்போது, அவர்களைக் கண்டுகொள்ளாமல் ஏழைகளின் ஓலைக் கொட்டகைகளை மட்டும் குறிவைத்து இடிப்பது எந்த வகையில் நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இந்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டது யார் என்றும் அதிகாரிகளிடம் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.
தாலிச் செயினை அடகு வைத்து குடிசை அமைத்தோம்… இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம்!
பாதிக்கப்பட்ட பெண்களும் ஆண்களும் தங்களது வேதனையை கண்ணீர் மல்க வெளிப்படுத்தினர். இங்கு வசிப்பவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல; அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை எளிய மக்கள் எனத் தெரிவித்தனர்.
மனைவியின் தாலிச் செயினை அடகு வைத்தும், பல இடங்களில் வட்டிக்குக் கடன் வாங்கியும், சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைக் கொடுத்து இடத்தை வாங்கி குடிசை அமைத்ததாகக் கூறிய அவர்கள், தற்போது குடிசைகளும் இடிக்கப்பட்டதால் கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு எங்கே செல்வது என தெரியாமல் நடுத்தெருவில் நிற்பதாகக் கதறி அழுதனர்.
கடந்த ஆட்சியில் தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும், தற்போதைய ஆட்சியிலாவது வாழ்வில் விடிவு கிடைக்கும் என நம்பி வாக்களித்ததாகவும் தெரிவித்த பெண்கள், மின் மீட்டருக்குப் பணம் செலுத்தியும் ஏமாற்றப்பட்டதாகவும், தற்போது இருந்த இடமும் பறிபோய்விட்டதாகவும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் – ஆப்பூர் மக்கள் கோரிக்கை
பல தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து வரும் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.
அதே நேரத்தில், அரசு இந்த இடங்களை ஆக்கிரமிப்பு நிலமாகக் கருதி அகற்ற நினைத்தால், ஒரே சர்வே எண்ணில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் மாடிக் கட்டிடங்களையும் பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்றும், ஏழைகளின் வாழ்வாதாரத்தை மட்டும் குறிவைத்து நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் முற்றுகைப் போராட்டத்தால் ஆப்பூர் பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.












