சிங்கபெருமாள்கோவில் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 16 வயது பள்ளி மாணவி மீது புறநகர் மின்சார ரயில் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகள் யுவஸ்ரீ (16), மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் மற்றும் திருத்தேரி ரயில்வே கேட் இடையே உள்ள தண்டவாளத்தை கடந்து தனது தோழியின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புறநகர் மின்சார ரயில் மோதிய விபத்து
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில் வருவதை கவனிக்காமல் சென்றதாகக் கூறப்படும் நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரயில் எதிர்பாராத விதமாக யுவஸ்ரீ மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த மாணவியை மீட்ட ரயில்வே போலீசார், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி யுவஸ்ரீ, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
16 வயது பள்ளி மாணவி ரயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












