Advertisement

கொளத்தூர் கல்குவாரி லாரிகள் போராட்டம்: பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசிய போலீசார்? பரபரப்பு!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கொளத்தூர் கிராமத்தில் குடியிருப்புப் பகுதி வழியாகச் செல்லும் கல்குவாரி லாரிகளைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களிடம் சித்தாமூர் போலீசார் தகாத மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

குடியிருப்புப் பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கல்குவாரி லாரிகள்!

மதுராந்தகம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் தனியார் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்குவாரிக்குச் செல்லும் கனரக லாரிகள் கிராமத்தின் குடியிருப்புப் பகுதிகள் வழியாகத் தினந்தோறும் அதிக அளவில் சென்று வருகின்றன.

Advertisement

கிராமத்தின் முக்கியச் சாலை வழியாக நூற்றுக்கணக்கான கல்குவாரி லாரிகள் அதிக பாரத்துடன் அதிவேகமாக இயக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், லாரிகள் எழுப்பும் புழுதியால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, காலை நேரங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் நடைப்பயிற்சி மேற்கொள்வோரும் அச்சத்துடனேயே சாலையைக் கடக்க வேண்டிய நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குற்றச்சாட்டு

குடியிருப்புப் பகுதிகள் வழியாகக் கல்குவாரி லாரிகள் செல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனுக்கள் அளித்ததாகத் தெரிவிக்கின்றனர்.

ஆனால், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அவ்வழியாக வந்த கல்குவாரி லாரிகளைச் சிறைப்பிடித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களிடம் தகாத வார்த்தைகளால் பேசிய போலீசார்?

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் முதியவர்கள் என்றும் பாராமல் பொதுமக்களை ஒருமையில் பேசியதுடன், தகாத மற்றும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய காவல்துறையினர், அதிகாரத் தோரணையில் பொதுமக்களை விரட்டியடித்ததுடன், சிலரை வலுக்கட்டாயமாகக் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.

கல்குவாரி லாரிகளுக்குத் தடை விதிக்க கிராம மக்கள் கோரிக்கை

கல்குவாரி லாரிகளால் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கக் கோரிப் போராடிய பொதுமக்களிடம் காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் அப்பகுதி மக்களிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் அதிருப்தியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு கொளத்தூர் கிராமத்தின் குடியிருப்புப் பகுதிகள் வழியாகக் கல்குவாரி லாரிகள் செல்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement