செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகார் எழுந்துள்ளது. ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், புதிதாக வரும் நோயாளிகள் ஸ்ட்ரெச்சரிலேயே சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் நோயாளிகள்
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தின் முக்கிய அரசு மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், மதுராந்தகம், செய்யூர், மாமல்லபுரம், வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தினமும் உள் நோயாளிகளாகவும், புற நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக, சாலை விபத்துகளில் காயமடைந்தவர்கள், திடீர் உடல்நலக் குறைவு ஏற்படுபவர்கள் மற்றும் அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் அதிக அளவில் இம்மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இதனால் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள்; ஸ்ட்ரெச்சரில் சிகிச்சை
இந்த நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவசர சிகிச்சைப் பிரிவில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக, ஒரே படுக்கையில் இரண்டு நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், புதிதாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைக்காததால் ஸ்ட்ரெச்சரிலேயே படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுமா?
எனவே, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், நோயாளிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் படுக்கைகள் மற்றும் தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையை நம்பி வரும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு தரமான சிகிச்சையுடன் போதிய அடிப்படை வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












