Advertisement

மதுராந்தகம் வீட்டுக் கொள்ளை: 2 சவரன் நகை, பித்தளைப் பொருட்கள் திருட்டு; 3 மணி நேரம் தாமதமாக வந்த போலீசார்!

மதுராந்தகம் அருகே சிலாவட்டம் கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 2 சவரன் தங்க நகைகள் மற்றும் பித்தளைப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கொள்ளைச் சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தும் போலீசார் சுமார் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகக் கூறி கிராம மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து கொள்ளை

செங்கல்பட்டு மாவட்டம், சிலாவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தாமரை. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார்.

Advertisement

இந்நிலையில், ஊர் திரும்பிய செந்தாமரை, தனது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 சவரன் தங்க நகைகள் மற்றும் வீட்டிலிருந்த பித்தளைப் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினருக்குத் தகவல் தெரிவித்த செந்தாமரை, காவல் கட்டுப்பாட்டு அறையையும் தொடர்புகொண்டு புகார் அளித்தார்.

Advertisement

3 மணி நேரம் தாமதமாக வந்த போலீசார்?

கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தும் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

நீண்ட நேரத்திற்குப் பிறகு வந்த போலீசார், வீட்டை மேலோட்டமாகப் பார்வையிட்டுவிட்டு, காவல் நிலையத்திற்கு வந்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்குமாறும், அதன் பிறகு கைரேகை நிபுணர்கள் வருவார்கள் என்றும் கூறிவிட்டுச் சென்றதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் கிராம மக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.

கிராமங்களில் இரவு நேர ரோந்து இல்லை எனப் புகார்

இதுகுறித்து சிலாவட்டம் கிராம மக்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் உள்ள மின்மோட்டார்கள் தொடர்ந்து திருடு போவது வாடிக்கையாகிவிட்டதாகத் தெரிவித்தனர்.

மதுராந்தகம் போலீசார் நகரப் பகுதிகளில் மட்டுமே ரோந்துப் பணியில் ஈடுபடுவதாகவும், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள தங்கள் ஊருக்கு இதுவரை ஒருநாள்கூட இரவு நேர ரோந்துப் பணிக்குக் காவலர்கள் வந்ததில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

காவல்துறையின் மெத்தனப் போக்கால் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்குப் பயம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

கொள்ளையர்களைக் கைது செய்ய பொதுமக்கள் கோரிக்கை

எனவே, சிலாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தொடரும் திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க முக்கிய இடங்களில் கூடுதல் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும், காவல்துறையினர் தினசரி இரவு நேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், செந்தாமரையின் புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை நடத்தி கொள்ளையர்களை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement