Advertisement

சிங்கப்பெருமாள் கோவில் விபத்து: அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு இளைஞர்கள் பலி!

செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்ற நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை முடிந்து வீடு திரும்பியபோது விபரீதம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தாமன் மகன் தமிழ்ச்செல்வன் (20), பழனி மகன் தர்மதுரை (22) ஆகிய இருவரும் சிங்கப்பெருமாள் கோவிலில் வாடகை வீட்டில் தங்கி, ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள ‘டயாங் மெட்டல்’ தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.

Advertisement

இந்நிலையில், வேலை முடிந்து இருவரும் யமஹா ஆர்-15 (Yamaha R15) இருசக்கர வாகனத்தில் சிங்கப்பெருமாள் கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திருக்கச்சூர் பெட்ரோல் பங்க் சாலை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.

Advertisement

இதில் தூக்கி வீசப்பட்ட தமிழ்ச்செல்வன் மற்றும் தர்மதுரை ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைச் சேகரித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க் சந்திப்பை மூட வேண்டும்; லாரிகளை அகற்றக் கோரிக்கை

இதற்கிடையே, திருக்கச்சூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலை சந்திப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு அந்தச் சந்திப்பைத் திறந்து வைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், சர்வீஸ் சாலையில் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதால் எதிரே வரும் வாகனங்கள் தெரிவதில்லை என்றும், இதனால் அந்தப் பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, திருக்கச்சூர் பெட்ரோல் பங்க் அருகே உள்ள சாலை சந்திப்பை உடனடியாக மூடுவதுடன், சர்வீஸ் சாலையில் நிறுத்தப்படும் லாரிகளையும் அகற்ற காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement