செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திலிருந்து அரை சவரன் தங்கத் தோடு திருடப்பட்டதாக உறவினர்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். வார்டு பாய் ஒருவர் நகையை எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் புகார் மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஆட்டுப்புத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (73), உடல்நலக் குறைவு காரணமாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லட்சுமி உயிரிழந்தார்.
சடலத்திலிருந்து தங்கத் தோடு மாயம்
இதையடுத்து, மூதாட்டியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்வதற்காக சடலத்தின் மீது போர்த்துவதற்குப் புதுத் துணி வாங்கி வருமாறு அங்கிருந்த வார்டு பாய் இப்ராஹிம் என்பவர் உறவினர்களிடம் கூறியதாகத் தெரிகிறது.
உறவினர்கள் துணி வாங்குவதற்காக வெளியே சென்ற நேரத்தில், மூதாட்டியின் காதில் அணிந்திருந்த அரை சவரன் தங்கத் தோட்டை இப்ராஹிம் கழற்றி எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
துணி வாங்கிவிட்டு திரும்பி வந்த உறவினர்கள், மூதாட்டியின் காதில் இருந்த தங்கத் தோடு காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, வார்டு பாய் இப்ராஹிம் தான் தங்கத் தோட்டை எடுத்துச் சென்றதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
விசாரணை நடத்தக் கோரிக்கை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து தங்க நகைகள் திருடப்படுவது தொடர்கதையாகி வருவதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகமும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உறவினர்கள் முன்வைத்துள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை வெளிவர வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.












