Advertisement

சூணாம்பேடு தீபாவளி பண்டு மோசடி புகார் – ரூ.3 கோடி இழந்து தவிக்கும் 3,000 குடும்பங்கள்!

சூணாம்பேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தீபாவளி பண்டு மற்றும் குலுக்கல் சீட்டு நடத்தி சுமார் ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாக பெண் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. பணம் கட்டிய 3,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது சேமிப்பை இழந்து தவிப்பதாகக் கூறி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

கிராமப்புற ஏழை, எளிய மக்களின் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் குறிவைத்து தீபாவளி பண்டு மற்றும் குலுக்கல் சீட்டு மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்தப் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

3,000 பேரிடம் பணம் வசூல் – ரூ.3 கோடி மோசடி புகார்

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூணாம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு ஏற்பட்ட பண மோசடி குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திரண்டு புகார் மனு அளித்தனர்.

சூணாம்பேடு அடுத்த கயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா (40), அப்பகுதி மக்களிடம் மாதம் ரூ.250 வீதம் தீபாவளி பண்டு சீட்டு மற்றும் ரூ.1 லட்சம் மதிப்பிலான குலுக்கல் சீட்டு நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

அவரது பேச்சை நம்பி சூணாம்பேடு, கயநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்டோர் பல மாதங்களாக பணம் செலுத்தி வந்துள்ளனர். இவ்வாறு வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை சுமார் ரூ.3 கோடி வரை இருக்கும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீபாவளி முடிந்ததும் தலைமறைவான பெண்

தீபாவளி பண்டிகையின்போது சீட்டுப் பணத்திற்கான பரிசுப் பொருட்கள் மற்றும் உரிய தொகையை வழங்குவதாக கவிதா உறுதியளித்திருந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், தீபாவளி பண்டிகை முடிந்தும் பணத்தையோ பரிசுப் பொருட்களையோ வழங்காமல், திடீரென வீட்டைப் பூட்டிவிட்டு கவிதா தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவரைப் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால், தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

கூலி வேலை செய்து சேமித்த பணத்தை இழந்து தவிக்கும் குடும்பங்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கூறுகையில்,

“நாங்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துபவர்கள். எங்களுடைய அன்றாடச் செலவுகளைக் குறைத்து, பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் பண்டிகை காலச் செலவுகளுக்காகவும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை மிகுந்த நம்பிக்கையுடன் கவிதா நடத்திய தீபாவளி பண்டு சீட்டில் கட்டி வந்தோம்.

தற்போது அவர் திடீரென மாயமானதால் எங்களுடைய சேமித்த பணத்தை மொத்தமாக இழந்து, குடும்பங்களில் கடுமையான பொருளாதார நெருக்கடியும் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளன. எங்களுடைய அன்றாட வாழ்வாதாரமே தற்போது கேள்விக்குறியாகியுள்ளது” என வேதனையுடன் தெரிவித்தனர்.

ஏஜென்ட்களாக சேர்த்தவர்களுக்கும் நெருக்கடி

மேலும், ஏஜென்ட்களாக செயல்பட்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை சீட்டுப் பண்டில் சேர்த்ததாகவும், தற்போது பணம் கட்டியவர்கள் தங்களது வீடுகளுக்கு வந்து தொந்தரவு செய்வதாகவும் சிலர் தெரிவித்தனர்.

இதனால் குடும்பங்களில் கணவன், மனைவி இடையே பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், பெண் குழந்தைகளை திருமணம் செய்து கொடுத்த வீடுகளில் இருந்து அவர்களை மீண்டும் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் கண்ணீருடன் கூறினர்.

சீட்டு பணத்தை இழந்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி, குடும்ப உறவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

தலைமறைவான கவிதாவை கைது செய்து பணத்தை மீட்டுத் தர கோரிக்கை

இந்த விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தலையிட்டு, மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டு தலைமறைவாக உள்ள கவிதாவை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும், தங்களின் உழைப்பில் சேமித்த பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தங்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement