ஊரப்பாக்கம் அருகே நடுவழியில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்காக இயக்கப்பட்ட சிறப்புப் பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். கைக்குழந்தைகளுடன் சாலையோரத்தில் தவித்த பயணிகளை ஏற்றிச் செல்ல வந்த மாற்றுப் பேருந்து, அனைவரையும் ஏற்றாமல் புறப்பட்டுச் சென்றதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரப்பாக்கம் அருகே பழுதாகி நின்ற சிறப்புப் பேருந்து
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு நாட்களுக்கு சுமார் 1,023 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கிளாம்பாக்கத்திலிருந்து சுமார் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்ட அரசுப் பேருந்து ஒன்று, ஊரப்பாக்கம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நடுவழியில் நின்றது.
இதனால் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் சாலையோரத்தில் இறங்கினர். குறிப்பாக, கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பயணிகள் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.
பயணிகளை ஏற்றாமல் சென்ற மாற்றுப் பேருந்து
அப்போது, கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்தை பயணிகள் கைகாட்டி நிறுத்தினர்.
பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், சாலையோரத்தில் தவித்த பயணிகள் அனைவரையும் ஏற்றிக்கொள்ளாமல், பயணிகள் ஏறிக்கொண்டிருந்தபோதே பேருந்தை இயக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் பேருந்தைப் பிடிப்பதற்காகப் பயணிகள் அதன் பின்னாலேயே ஓடியுள்ளனர். இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நீண்ட நேரத் தவிப்புக்குப் பிறகு வேறு பேருந்தில் பயணம்
மாற்றுப் பேருந்தும் பயணிகளை முழுமையாக ஏற்றாமல் சென்றதால், கைக்குழந்தைகளுடன் இருந்தவர்கள் உள்ளிட்ட பயணிகள் நீண்ட நேரம் சாலையோரத்தில் காத்திருந்து அவதிப்பட்டனர்.
பின்னர், அவ்வழியாக வந்த மற்றொரு பேருந்தின் மூலம் அவர்கள் திருவண்ணாமலைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஓட்டுநர், நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கு முன்பு அவற்றின் தரம் மற்றும் இயந்திரப் பராமரிப்பு குறித்து அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் தவித்த பயணிகளை ஏற்றாமல் சென்றதாகக் கூறப்படும் மாற்றுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது உரிய விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












