கூடுவாஞ்சேரி நகராட்சியில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழற்குடையில், ஏற்கனவே இருந்த கேபிள் வயர்களை அகற்றாமல் அவற்றின் மீது கான்கிரீட் போட்டு சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்ததாரரின் அலட்சியத்தைக் கேள்விக்குள்ளாக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக வைரலாகி வருகிறது.
ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை
கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக வந்து செல்லும் வகையில் நிழற்குடையில் சாய்வுதளம் (Ramp) அமைக்கப்பட்டுள்ளது.
கேபிளை அகற்றாமல் கான்கிரீட் போட்டு அமைக்கப்பட்ட ராம்ப்
ஆனால், சாய்வுதளம் அமைக்கப்பட்ட இடத்தில் ஏற்கனவே புதைக்கப்பட்டிருந்த கேபிள் வயர்களை முறையாக அகற்றாமல், அவற்றை ஓரமாக விட்டுவிட்டு அதன் மீதே கான்கிரீட் போட்டு சாய்வுதளம் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அந்த சாய்வுதளத்தை முறையாகப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் கேபிள் வயர்களில் பாதசாரிகள் கால் இடறி விழுந்து காயமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கேபிள் இருப்பதைக் கூட கவனிக்காமல் அலட்சியமாகப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீதும், கட்டுமானப் பணிகளை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நகராட்சி ஊழியர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“அடேய், யாருப்பா அந்த காண்ட்ராக்டர்?” – இணையத்தில் வைரல்
இதற்கிடையே, கேபிள் வயர்களை அகற்றாமல் அமைக்கப்பட்டுள்ள சாய்வுதளத்தின் புகைப்படம், “அடேய், யாருப்பா அந்த காண்ட்ராக்டர்?” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாகப் பகிரப்பட்டு வருகிறது.
கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற இந்தக் கட்டுமான அலட்சியம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.












