Advertisement

நன்கொடையாளர்கள் சலுகை பாதியாகக் குறைப்பு.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் சாதாரண பக்தர்களின் தரிசன நேரத்தை அதிகரிக்கும் நோக்கில், திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) அறக்கட்டளை வாரியம் இன்று அதிரடியான புதிய கொள்கை முடிவுகளை எடுத்துள்ளது. இன்று திருமலை அன்னமய்யா பவனில் நடைபெற்ற வாரியக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி முத்தடா ரவிச்சந்திரா ஆகியோர் இந்த விபரங்களை வெளியிட்டனர். இதன்படி, பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கான இலவச தங்கும் அறை, லட்டு பிரசாதம் மற்றும் விஐபி பிரேக் தரிசன முன்னுரிமை சலுகைகள் இன்று நள்ளிரவு முதல் அதிரடியாகப் பாதியாகக் குறைக்கப்படுகின்றன.

திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்கும் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் திட்டங்களுக்கு நன்கொடை வழங்குபவர்களுக்கான தங்கும் வசதி, லட்டு எண்ணிக்கை மற்றும் தரிசன நாட்கள் இன்று (ஜூலை 14) நள்ளிரவு முதல் பாதியாகக் குறைக்கப்பட்டு, புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

Advertisement

இந்த புதிய விதிமுறைகள் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் புதிய நன்கொடைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே நன்கொடை வழங்கி சலுகைகளைப் பெற்று வருபவர்களின் உரிமைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என்றும் தலைவர் பி.ஆர். நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார். விஐபி மற்றும் நன்கொடையாளர்களின் சலுகை நாட்களைக் குறைப்பதன் மூலம், தினசரி பல மணிநேரம் வரிசையில் காத்திருக்கும் சாதாரண தர்ம தரிசன பக்தர்களுக்கு கூடுதல் தரிசன நேரம் ஒதுக்கப்படவுள்ளது.

நன்கொடையாளர் சலுகை மாற்றங்கள் மட்டுமின்றி, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளுக்கும் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது: எஸ்எஸ்டி (SSD) டோக்கன் பெற்று காத்திருக்கும் பக்தர்களுக்காக ஆல்வார் குளம் அருகே ரூ.6.31 கோடியில் தங்குமிடங்கள் மற்றும் கழிப்பறை வசதிகளும், குமரதாரா மற்றும் பசுபுதாரா அணைகளை வலுப்படுத்த ரூ.2.77 கோடியில் இருவழிப் பாலமும் அமைக்க டெண்டர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

Advertisement

திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள சத்திரங்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காகத் தீயணைப்பு அமைப்புகளைப் பராமரிக்க ரூ.2.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காலாவதியான 12 பழைய சத்திர கட்டடங்களை அகற்றிவிட்டு, நன்கொடையாளர்களின் உதவியுடன் புதிய கட்டடங்கள் எழுப்பப்படவுள்ளன.

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement