Advertisement

“கணவருடன் சென்ற பெண்ணிடம் சில்மிஷம்!” – போக்குவரத்து காவல் ஆய்வாளர் கைது!

சென்னை வேளச்சேரியில் கணவருடன் நடந்து சென்ற பெண்ணிடம் சாலையில் அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவரை வேளச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி ஒரண்டியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர், நேற்று முன்தினம் இரவு தனது கணவருடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபர் ஒருவர், நடந்து சென்ற பெண்ணின் உடலில் கை வைத்து அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பெண், உடனடியாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisement

பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், சம்பவம் நடைபெற்ற இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக (Traffic Inspector) பணிபுரியும் மணிமாறன் என்பதும், அவர் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்ததும் தெரியவந்தது.

சம்பவத்தன்று இரவு காவல் ஆய்வாளர் மணிமாறன் தனது மைத்துனருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, மைத்துனர் வாகனத்தை ஓட்ட மணிமாறன் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அப்போது சாலையில் கணவருடன் சென்று கொண்டிருந்த பெண்ணிடம் அவர் அத்துமீறி நடந்துகொண்டது விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து வேளச்சேரி காவல்துறையினர் காவல் ஆய்வாளர் மணிமாறனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையில் உயரிய பொறுப்பில் இருக்கும் ஆய்வாளரே பெண்ணிடம் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement