Advertisement

“2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம்: கோவையா, சென்னையா?” – சீனிவாசராஜ் பேட்டி!

தமிழ்நாட்டில் அமைப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ள 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான பணிகள் இன்னும் முழு வடிவம் பெறவில்லை என்றும், அது கோவையா அல்லது சென்னையா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் (TNCA) தலைவர் சீனிவாசராஜ் தெரிவித்துள்ளார்.

10-வது டி.என்.பி.எல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டி குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசராஜ், டி.என்.பி.எல் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாவட்டங்களில் நடத்தப்படுவது குறித்து விவரித்தார். “தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் கிரிக்கெட்டில் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே போட்டிகள் சுழற்சி முறையில் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டு திண்டுக்கல் மற்றும் சென்னையில் போட்டிகள் நடைபெறுகின்றன என்றால், அடுத்த ஆண்டு மற்ற மாவட்டங்களில் நடத்தப்படும். இத்தொடர் மூலம் பல திறமையான இளம் வீரர்கள் உருவாகி வருகின்றனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தும் வகையில் 7 தரம் வாய்ந்த மைதானங்கள் தயாராக உள்ளன” எனக் குறிப்பிட்டார்.

Advertisement

மகளிர் டி.என்.பி.எல் தொடர் நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் நிறைய திறமைமிக்க மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் உள்ளனர். மகளிர் டி.என்.பி.எல் தொடங்குவது குறித்துத் தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இதன் முதற்கட்டமாக விரைவில் மகளிருக்கான காட்சிப் போட்டி (Exhibition Match) ஒன்று நடத்தப்படும். அதில் கிடைக்கும் வரவேற்பையும் வெற்றியையும் பொறுத்து மகளிர் டி.என்.பி.எல் தொடரை அதிகாரப்பூர்வமாக நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

தொடர்ந்து, முந்தைய திமுக ஆட்சியின் போது கோவையில் 2-வது சர்வதேச மைதானம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டின் 2-வது சர்வதேச கிரிக்கெட் மைதானம் தொடர்பான திட்டமிடல் இன்னும் முழுமையான வடிவத்தைப் பெறவில்லை. அந்த மைதானத்தைக் கோவையில் அமைப்பதா அல்லது சென்னையிலா அல்லது வேறு எந்த மாவட்டத்தில் அமைப்பது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை” என்று தெளிவுபடுத்தினார்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement