ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்றும், தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்க நீதிமன்றத்தில் விளக்கம் பெற வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாபெரும் பொதுக்குழுவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முன்னிலையில் அதிரடித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில மற்றும் மாவட்ட செயற்குழு பொதுக்குழு கூட்டம் தாம்பரம் அடுத்த வரதராஜபுரத்தில் இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த முக்கியமான கூட்டத்தில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு. கு. தியாகராஜன் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில், ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மற்றும் பணிப் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சங்கத்தின் தலைவர் கு. தியாகராஜன் பேசுகையில், “தேசிய அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால், பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு தற்பொழுது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே, ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பணி விலக்கு அளிக்கும் வகையில் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரத் தமிழக அரசு ஒன்றிய அரசுக்குக் கடுமையான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்றொருபுறம், உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடி இதற்கான உரிய விளக்கத்தையும் மாநில அரசு பெற வேண்டும். ஆசிரியர்கள் தங்களது பணியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத் தகுதித் தேர்வுக்குத் தயாரிப்பு விடுமுறை எடுத்துப் படித்தால், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி முற்றிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே தமிழக அரசு இதில் முழுப் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும்” என்று எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) ஆதரிப்பதாகக் கூறியுள்ள தமிழகத்தின் தற்போதைய தவெக அரசு, அதனை முழுமையாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை கடந்த தி.மு.க. அரசு அமல்படுத்திய திட்டங்களை நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு நீதிமன்றத் தடை விதிக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில், அமைச்சரின் மனைவி உள்ளிட்ட சில முக்கியப் பிரமுகர்களுக்கு மட்டும் விதிகளை மீறிப் பணி மாறுதல் வழங்கப்பட்டிருப்பது, தூய்மையான ஆட்சி வழங்குவதாகக் கூறும் முதலமைச்சரின் செயல்பாட்டிற்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது என்றும், இது குறித்து முறையான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதிரடிக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இவற்றுடன், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தற்காலிக முறையை ஒழித்து நிரந்தரத் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் தியாகராஜன் தமிழக அரசுக்கு கோரிக்கைகளை விடுத்தார்.













