செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெய்குப்பி ஊராட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மின் இணைப்பு இன்றி இருளில் தவித்து வந்த மக்களுக்கு, வெறும் 60 நாட்களில் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டு, அவர்களது வீடுகளில் மின் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நெய்குப்பி ஊராட்சியில் நீண்டகாலமாகக் மின் இணைப்பு வசதியின்றி அவதிப்பட்டு வந்த மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக மின் இணைப்பு வழங்கும் சிறப்பு விழா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் மற்றும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். தொடர்ந்து, முதற்கட்டமாகத் தேர்வான 90 பயனாளிகளுக்கு மின் இணைப்பிற்கான கார்டுகளையும் வழங்கித் திட்டத்தைத் தொடக்கி வைத்தனர்.
விழாவில் உரையாற்றிய திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், “தேர்தல் வெற்றிக்குப் பிறகு மக்கள் என்னைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் 20 வருடங்களுக்கும் மேலாக மின் வசதியின்றி வாழ்ந்து வரும் நெய்குப்பி மக்களின் கோரிக்கை மிகவும் முக்கியமானது. வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பேசி இதற்கான உரிய வழிமுறைகளைப் பின்பற்றித் தேவையைப் பூர்த்தி செய்வேன் என்று வாக்குறுதி அளித்திருந்தேன். அதன்படி, மாவட்ட ஆட்சியரின் உறுதுணையோடும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆனந்த் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகியோரின் வழிகாட்டுதலோடும் அனைத்துப் பணிகளும் போர்க்கால அடிப்படையில் முடிக்கப்பட்டு, இன்று முதற்கட்டமாக 90 குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தொகுதி மக்களுக்கான நலத்திட்டப் பணிகள் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்படுத்தப்படும்” என உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார், “தமிழ்நாடு முதலமைச்சராகத் தளபதி ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்றதும், தனது முதல் கையெழுத்தாக 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்தார். அதே வழியில், திருப்போரூர் எம்.எல்.ஏ விஜயராஜ் ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களுக்குள்ளாகவே, பொதுமக்களின் 20 ஆண்டுகால நீண்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்து முதற்கட்டமாக 90 குடும்பங்களுக்கு மின்சார வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். அவரது மக்கள் சேவை தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன்” எனப் பாராட்டிப் பேசினார்.
20 ஆண்டு கால இருள் விலகி, வீடுகளில் வண்ண விளக்குகள் ஜொலிப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் கண்ணீர் மல்கத் தங்களது நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு உயர் அதிகாரிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.













