திருநீர்மலை ஏரிக்கரையோரத்தில் அதிகரித்து வரும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
📍செங்கல்பட்டு: பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பாண்ட்ஸ் சிக்னலில் இருந்து பிரியும் திருநீர்மலை சாலை, நாகல்கேணி, திருநீர்மலை ஏரி மற்றும் திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வரும் நிலையில், திருநீர்மலை ஏரிக்கரையோரம் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கடைகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
🚗 ஆக்கிரமிப்பு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையிலேயே நிறுத்திச் செல்வதால், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் மேற்கொள்வதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
⚠️ சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறைகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர்வளத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து சாலையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












