குறைந்த விலையில் சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி தாய்லாந்திற்கு வரவழைக்கப்பட்டு, சர்வதேசக் கடத்தல் கும்பலால் சிறைபிடிக்கப்பட்டு கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு வந்த 3 இந்திய இளைஞர்களைத் தாய்லாந்து காவல்துறையினர் அதிரடியாகப் புகுந்து பத்திரமாக மீட்டுள்ளனர்.
சமீபகாலமாக இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் “குறைந்த கட்டணத்தில் தாய்லாந்து சுற்றுலா பேக்கேஜ்” என்ற போலி விளம்பரங்களை நம்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இணையவழிக் குற்றச் செயல்கள் மற்றும் ஆள் கடத்தல் கும்பல்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில் இருந்து 3 இளைஞர்கள் இந்த போலி கவர்ச்சி விளம்பரங்களை நம்பி தாய்லாந்து நாட்டிற்குச் சுற்றுலாச் சென்றுள்ளனர்.
அங்குச் சென்றடைந்த அவர்களை வரவேற்பது போல நடித்த சர்வதேச ஆள் கடத்தல் கும்பல், திடீரென அந்த 3 இந்திய இளைஞர்களையும் ரகசியமான ஒரு கட்டிடத்திற்குப் பலவந்தமாகக் கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளது. அங்கு அவர்களை சட்டவிரோத இணையவழிப் பண மோசடிகளில் ஈடுபட வற்புறுத்தியும், அவர்களது குடும்பத்தினரிடம் பெரும் தொகையைக் கப்பமாகப் பறிப்பதற்காகவும் மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து ரகசிய உளவுத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, தாய்லாந்து காவல்துறையினர் சிறப்புப் படையுடன் கடத்தல்காரர்களின் மறைவிடத்தைச் சுற்றி வளைத்து அதிரடிச் சோதனை நடத்தினர். போலிசாரின் இந்தத் திடீர் மின்னல் வேக நடவடிக்கையால், சித்ரவதைக்குள்ளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 3 இந்திய இளைஞர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர்களைக் கைது செய்து தாய்லாந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டுச் சுற்றுலா செல்பவர்கள் போலி முகவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.












