Advertisement

தாம்பரம் சிக்னல் கோளாறு; ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு

சென்னை புறநகர் ரயில் பயணிகள் நேற்று காலை கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தலைமை சிக்னல் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறநகர் மற்றும் விரைவு ரயில் சேவைகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டன.

தாம்பரம் – சென்னை கடற்கரை மற்றும் செங்கல்பட்டு – சென்னை வழித்தடங்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சேவையை பெரிதும் நம்பியுள்ளனர்.

Advertisement

இந்நிலையில், நேற்று காலை தாம்பரம் ரயில் நிலையத்தின் தலைமை சிக்னல் கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சிக்னல் அமைப்பு செயலிழந்தது. இதனால் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார மற்றும் விரைவு ரயில்கள் பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டன.

அதேபோல் தாம்பரத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற ரயில்களும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்ளிட்ட நிலையங்களில் நிறுத்தப்பட்டன. காலை நேர நெரிசல் நேரத்தில் ஏற்பட்ட இந்த பாதிப்பால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

ரயில் சேவை பாதிப்பு குறித்து உரிய அறிவிப்பு எதுவும் வழங்கப்படாததால், பலர் ரயில்களில் இருந்து இறங்கி நடந்து தாம்பரம் நிலையத்தை அடைந்தனர். பின்னர் ரயில்வே அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டபோது, முறையான பதில் கிடைக்கவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

இதனால் சில இடங்களில் பயணிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு, ரயில் சேவை மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி, பயணிகளுக்கு உடனடி தகவல் வழங்கும் நடைமுறையை வலுப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement