மதுரை அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான 1.79 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்து நிலத்தைச் சுருட்டிய வழக்கில், குற்றவாளிகளைப் பிடிக்க 2 சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.மதுரை சொக்கிகுளம் பகுதியில் ‘அசோக விலாஸ்’ பங்களா மற்றும் தோட்டம் அடங்கிய 1.79 ஏக்கர் நிலம், மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் தர்ம காரியங்களுக்காக 1930-ஆம் ஆண்டில் உயில் மூலமாக எழுதி வைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 – 2021 காலகட்டத்தில்) நீதிமன்ற உத்தரவுகளையும், பத்திரப் பதிவுச் சட்ட விதிகளையும் காற்றில பறக்கவிட்டுப் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தின் பட்டா மாற்றப்பட்டு, அதிகாரிகளின் கூட்டுச் சதியால் பல கோடி ரூபாய்க்குப் பத்திரப் பதிவும் அடமானப் பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இப்பெரும் நில மோசடி குறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு (CCB) காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் முடிவில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் கோயில் நிலத்தைப் பட்டா மாற்றம் செய்து அடமானம் வைத்த குற்றத்திற்காக முன்னாள் வட்டாட்சியர், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் (VAO), முன்னாள் சார் பதிவாளர்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்பட மொத்தம் 19 பேர் மீது கூட்டுச் சதி, மோசடி உள்ளிட்டப் பல பிரிவுகளின் கீழ் முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இவ்வழக்கில் தொடர்புடைய 19 குற்றவாளிகளையும் விரைந்து கைது செய்யவும், முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் பல உயர் அதிகாரிகளின் தொடர்புகளை வெளிக்கொண்டு வரவும் 2 சிறப்புத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தென்மண்டலக் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சம்பவம், நில ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்ட முன்னாள் அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் கதியை ஏற்படுத்தியுள்ளது.












