Advertisement

சிங்கப்பெருமாள் கோவிலில் குடிநீர் திருட்டு..

சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் தெருக்குழாய்களில் மின் மோட்டார் மூலம் குடிநீர் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

🚰 குடிநீர் திருட்டால் பொதுமக்கள் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் சிங்கப்பெருமாள் கோவில், பகத்சிங் நகர், திருத்தேரி, பாரேரி, சத்யா நகர், விஞ்சியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சிலர் தங்களது வீடுகளில் மின் மோட்டார் பொருத்தி தெருக்குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சி சேமிப்பதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பல வீடுகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement

⚠️ அரசியல் செல்வாக்கால் மிரட்டல் என பொதுமக்கள் குற்றச்சாட்டு

பகுதி மக்கள் கூறுகையில், தெருக்குழாய்களில் பிளாஸ்டிக் குழாய் அல்லது மின் மோட்டார் பயன்படுத்த அனுமதி இல்லை என்றாலும், சில வசதிபடைத்தவர்களும் அரசியல் செல்வாக்கு கொண்டவர்களும் விதிகளை மீறி தண்ணீர் எடுப்பதாக குற்றம்சாட்டினர். இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு, பலர் வெளியில் இருந்து ஒரு குடம் தண்ணீரை ரூ.40 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

🚨 மின் மோட்டார் பறிமுதல், அபராதம் விதிக்கப்படும்

இந்த நிலையில், சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில், தெருக்குழாய்களில் மின் மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அனைவருக்கும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இனிமேல் மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, பயன்படுத்தப்படும் மின் மோட்டார்களும் பறிமுதல் செய்யப்படும் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement