செங்கல்பட்டில் உள்ள தனியார் விடுதியில், சென்னையைச் சேர்ந்த 37 வயது ஐ.டி. ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல லட்ச ரூபாய் இழப்பு மற்றும் கடன் பிரச்சினை காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னையில் காணாமல் போன ஐ.டி. ஊழியர்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் ஆனந்தராஜ் (37). இவர் சென்னையில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தில் ஐ.டி. ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இவருக்கு சத்யா (33) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஆனந்தராஜ் தனது குடும்பத்துடன் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம்போல் வேலைக்குச் செல்வதாக மனைவி சத்யாவிடம் கூறிவிட்டுச் சென்ற ஆனந்தராஜ், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியுள்ளார். எங்கும் தகவல் கிடைக்காததால், சென்னை காவல் நிலையத்தில் தனது கணவரைக் காணவில்லை எனப் புகார் அளித்தார்.
செங்கல்பட்டு விடுதியில் சடலமாக மீட்பு
இதற்கிடையே, செங்கல்பட்டு நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராட்டிணங்கிணறு பகுதியில் உள்ள ‘ஹோட்டல் காஞ்சி’ என்ற தனியார் விடுதியில் ஆனந்தராஜ் ஒரு நாள் வாடகைக்கு அறை எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்தது.
24 மணி நேரத்திற்கும் மேலாகியும் அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவைத் தட்டியுள்ளனர். உள்ளிருந்து எந்தப் பதிலும் வராததால், விடுதி நிர்வாகம் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தது.
தகவலறிந்து வந்த போலீசார், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஆனந்தராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம்; கடன் தொல்லையால் மன உளைச்சல்?
போலீசாரின் விசாரணையில், சென்னையில் காணாமல் போனதாகப் புகார் அளிக்கப்பட்ட ஆனந்தராஜ் தான் உயிரிழந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்த அவரது உறவினர்களும் உடலை அடையாளம் காட்டினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆனந்தராஜ் பங்குச்சந்தையில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்து நஷ்டமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கடன் பிரச்சினை காரணமாகக் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த ஆனந்தராஜ், வீட்டை விட்டு வெளியேறி செங்கல்பட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்ததாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு நகரப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












