செங்கல்பட்டு அருகே மெய்யூர் சந்திப்பில் இருசக்கர வாகனம் மீது எம்-சாண்ட் லாரி மோதிய கோர விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களுடன் பயணம் செய்த 3 வயது ஆண் குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது. பெற்றோர் இருவரும் குழந்தையின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருசக்கர வாகனம் மீது மோதிய எம்-சாண்ட் லாரி
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, முனுங்கப்பட்டு கிராமம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகன் வேலு (41). இவர் தனது மனைவி கவிதா என்கிற பச்சையம்மாள் (38) மற்றும் 3 வயது ஆண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்னையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது செங்கல்பட்டு அடுத்த மெய்யூர் சந்திப்பில், சென்னை நோக்கிச் செல்லும் சாலையில் அவர்களுக்குப் பின்னால் வந்த எம்-சாண்ட் லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வேலு மற்றும் அவரது மனைவி பச்சையம்மாள் ஆகிய இருவரும் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
3 வயது குழந்தை லேசான காயங்களுடன் உயிர் தப்பியது
இந்த விபத்தில் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த 3 வயது ஆண் குழந்தையின் முகத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டன. உடனடியாகக் குழந்தையை மீட்ட அங்கிருந்தவர்கள், முதலுதவி சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், உயிரிழந்த கணவன், மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படாளம் போலீசார் விசாரணை
3 வயது குழந்தையின் கண் முன்னே தாய், தந்தை இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக படாளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












