Advertisement

செங்கல்பட்டு கனமழை: சாலைகளில் குளம்போல் தேங்கிய மழைநீர்! நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

முரசு புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

Advertisement

செங்கல்பட்டு நகரிலும் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஜே.சி.கே. நகரில் 12 தெருக்களிலும் மழைநீர் தேக்கம்

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டில் அமைந்துள்ள ஜே.சி.கே. நகரில் மொத்தம் 12 தெருக்கள் உள்ளன. இப்பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.

Advertisement

கடந்த சில நாட்களாகப் பெய்த தொடர் மழை மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடையாததால், இப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியுமாக மாறியுள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி, சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கிறது.

இதன் காரணமாகப் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக இருப்பதால் நடந்து செல்வதற்குக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

இதுதொடர்பாகச் செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளிலும் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி, குண்டும் குழியுமாகவும் சேறும் சகதியுமாகவும் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, செங்கல்பட்டு நகரம் முழுவதும் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, சேதமடைந்த தெருக்களைச் சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பாக அதிகாரிகள் தலையிட வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement