தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத திறனற்ற அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதலமைச்சர்!
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறுகையில், தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 234 தொகுதிகளுக்கும் விஜய்தான் முதலமைச்சர். எனவே, அனைத்து தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால், எங்கெங்கெல்லாம் இடைத்தேர்தல் வருவதற்கு வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறதோ, அந்தத் தொகுதிகளுக்குச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்குவது தேர்தலை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரமாகவே பார்க்கப்படுகிறது என்றார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 3 சதவீதம்தான்!
ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் 3 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கிடைத்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதற்கு நிர்வாகக் கோளாறுதான் காரணம். நிர்வாகத் திறனற்ற அரசு செயல்பட்டு வருவதால் மாநிலத்தின் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் வருவாய் பாதிக்கப்படும்போது மக்களுக்குச் செயல்படுத்த வேண்டிய நலத்திட்டங்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
அரிசி, சர்க்கரை, பருப்பு விலை உயர்வு!
தமிழகத்தில் விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து அதிமுக சார்பில் ஊடகங்கள் வாயிலாகவும், பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து பேசி வருகிறோம் என்றார்.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆறு மாதங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன. ஒரு கிலோ அரிசி விலை ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ சர்க்கரை விலை ரூ.25 அதிகரித்துள்ளது.
பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், புளி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. மளிகைப் பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஆவின் பொருட்களின் விலையும் உயர்வு!
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஆவின் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களைப் பொதுமக்கள் அதிகளவில் வாங்குவார்கள். ஆனால், அவற்றின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த முடியாத திறனற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.
மேலும், இந்தப் பிரச்சினைகளைச் சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல் தேவையற்ற விஷயங்கள் குறித்துப் பேசி அரசு காலத்தை வீணடிப்பதாகவும், தமிழக அரசின் நிர்வாகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, பொதுமக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.












