Advertisement

பள்ளி பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியது; 40 மாணவர்கள் தப்பினர்

போந்தூர் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி பேருந்தின் பின்புற சக்கரம் திடீரென கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 40 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி பேருந்து புறப்பட்டது.

Advertisement

ஸ்ரீபெரும்புதூர் – சிங்கபெருமாள்கோவில் சாலையில் உள்ள மாத்தூர் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, திடீரென அதன் பின்புற சக்கரம் கழன்று ஓடியது. எதிர்பாராத இந்த சம்பவத்தால் பேருந்தில் இருந்த மாணவர்கள் அலறி கூச்சலிட்டனர்.

மாணவர்களின் சத்தத்தை கேட்டு அருகில் சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக உதவிக்கு விரைந்தனர். அவர்கள் மாணவர்களை பாதுகாப்பாக பேருந்தில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் பள்ளி நிர்வாகம் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தது.

Advertisement

இந்த சம்பவத்தில் எந்த மாணவருக்கும் காயம் ஏற்படாதது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பள்ளி பேருந்துகளின் பராமரிப்பு குறித்து பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் பேருந்து இயக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement