மாற்றுத்திறனாளிகள் சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசிக்க ஏதுவாக, அவர்களை இந்து சமய அறநிலையத் துறை மூலமாக இலவசமாக அழைத்துச் சென்று வரும் புதிய திட்டத்தினை வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் எனச் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன், சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கம் காணாமல் போன விவகாரம் குறித்துப் பேசுகையில், இந்த விவகாரத்தில் கேரள அரசு உடனடியாகத் தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் நீண்ட காலமாகச் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆசையோடு காத்திருக்கின்றனர் என்றும், ஆகவே இந்து சமய அறநிலையத் துறை மாற்றுத்திறனாளிகளை இலவசமாகச் சபரிமலைக்கு அழைத்துச் சென்று மீண்டும் தமிழ்நாட்டிற்கு அழைத்து வரும் திட்டத்தினை வகுத்து, வரக்கூடிய சட்டமன்றக் கூட்டத்தொடரில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்பொழுது தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டுமே சபரிமலைக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று சுட்டிக்காட்டிய அவர், அதற்குப் பதிலாகப் பக்தர்களின் நேர விரயத்தைக் குறைக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலிருந்தும் சபரிமலை வரை நேரடியாகச் செல்ல பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரினார். அதோடு, சபரிமலை சீசன் காலங்களில் தமிழ்நாட்டில் உள்ள பல முக்கியக் கோவில்களில் நீண்ட வரிசையில் பல நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால், கடும் விரதம் இருந்து மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர் என்றும், எனவே இந்து சமய அறநிலையத் துறை கோவில்களில் மாலை அணிந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்குப் பிரத்யேகத் தனி வரிசை அமைத்துச் சாமியை தரிசிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இறுதியாக, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகையுடன் ஆன்மீகச் சுற்றுலா மூலம் சபரிமலை ஐயப்பன் தரிசனத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், அதேபோல் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு முற்றிலும் இலவசமாகவே இந்த ஆன்மீகச் சுற்றுலாவை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.












