Advertisement

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 82 ஆயிரம் மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE) கீழ், தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் மூலம் ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் சேர்க்கை பணிகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் 82,888 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கல்வியாண்டிற்கான விண்ணப்பப் பதிவு சமீபத்தில் நிறைவடைந்தது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 7,740 தனியார் பள்ளிகளில் இருந்து மொத்தம் 2,51,537 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். பல பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களை விட விண்ணப்பங்கள் அதிகமாக இருந்ததால், அரசு வழிகாட்டுதலின்படி வெளிப்படையான குலுக்கல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

Advertisement

அதன்படி, நேற்று முன்தினம் அந்தந்த பள்ளிகளில் பெற்றோர், பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் முன்னிலையில் கணினி மூலம் குலுக்கல் நடைப்பெற்றது. இதன் மூலம் மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, ஒருசில மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் தேர்வாகியிருக்க வாய்ப்பு உள்ளதால், தற்போது வெளியிடப்பட்டுள்ள சேர்க்கை பட்டியல்களை ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

இதனைத் தொடர்ந்து, ஒரே மாணவர் பல பள்ளிகளில் தேர்வாகியிருந்தால், பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் இறுதி சேர்க்கை உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மாணவர்களின் இறுதி சேர்க்கை விவரங்கள் மற்றும் முழுமையான பட்டியல் அடுத்த வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த வாய்ப்பு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் தரமான கல்வி பெற முக்கிய ஆதரவாக இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement