மாநிலங்களவை எனப்படும் ராஜ்யசபா எம்.பி.க்களின் சம்பளம், மருத்துவப் படிகள் மற்றும் பயணப் படிகளுக்காகக் கடந்த இரு நிதியாண்டுகளில் மட்டும் சுமார் 262 கோடி ரூபாய் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநிலங்களவைச் செயலகம் தந்துள்ள அதிகாரப்பூர்வ பதில் மூலமாகத் தலைசுற்ற வைக்கும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர் என்பவர் மத்திய அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ராஜ்யசபா உறுப்பினர்களுக்குச் செலவிடப்படும் ஊதியம் மற்றும் படிகள் குறித்துக் கேள்விகளை முன்வைத்திருந்தார். இதற்கு மாநிலங்களவைச் செயலகம் அளித்துள்ள விளக்கமான பதிலில், கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு ஊதியமாக ரூ.25.71 கோடியும், மருத்துவப் படியாக ரூ.8.2 கோடியும் மற்றும் பயணப் படிகளுக்காக ரூ.24.99 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர படிகளையும் சேர்த்து அந்த ஒரே நிதியாண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக ரூ.98 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அதைத் தொடர்ந்த 2025-26-ஆம் நிதியாண்டில் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான மொத்தச் செலவினம் அசுர வேகத்தில் உயர்ந்து ரூ.163 கோடியாக அதிகரித்துள்ளது.
இது முந்தைய 2024-25-ஆம் ஆண்டின் செலவினத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 65 கோடி ரூபாய் கூடுதலாகும். இந்த 2025-26 நிதியாண்டில் மட்டும் எம்.பி.க்களின் சம்பளச் செலவு ரூ.44.6 கோடியாகவும், மருத்துவப் படிகள் ரூ.9.6 கோடியாகவும், பயணப் படிகள் ரூ.36 கோடியாகவும் உயர்ந்துள்ளது. மேலும், இதர படிகளுக்காக ரூ.58.78 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2024 முதல் 2026 வரையிலான இரண்டு ஆண்டு காலத்தில் ஒட்டுமொத்தமாக எம்.பி.க்களுக்காக ரூ.262 கோடி நிதி ஒதுக்கிச் செலவிடப்பட்டுள்ளது என்பதும், இதில் அதிகபட்சமாக ஊதியத்திற்காக மட்டுமே ரூ.151 கோடி வரை செலவழிக்கப்பட்டுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.சம்பளம் மற்றும் வழக்கமான படிகள் தவிர்த்து ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு அசாத்திய பயணச் சலுகைகளும் அள்ளி வழங்கப்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது உதவியாளருடன் இணைந்து ஆண்டிற்கு 34 முறை இலவச உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அனுமதி உண்டு. மேலும், இந்திய ரயில்வேயின் ரயில்களில் முதலாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டியில் (First AC) எவ்விதக் கட்டணமுமின்றி எந்நேரமும் பயணம் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களவை (லோக்சபா) எம்.பி.க்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மாபெரும் தொகுதிகளை நேரடியாகக் கவனித்து வரும் நிலையில், மாநிலச் சட்டமன்ற எம்.எல்.ஏ.க்கள் மூலம் மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ராஜ்யசபா எம்.பி.க்களுக்கான இந்த உள்கட்டமைப்புச் செலவினங்கள் ஆண்டுக்கு ஆண்டு அசுர வேகத்தில் உயர்ந்து வருவது மக்கள் மத்தியிலும் பொருளாதார நிபுணர்கள் மத்தியிலும் கடுமையான சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது
நிதி ஆண்டு,சம்பளம்,மருத்துவப் படி,பயணப் படி,இதர படிகள்,மொத்தச் செலவு
2024 – 2025,₹ 25.71 கோடி,₹ 8.2 கோடி,₹ 24.99 கோடி,-,₹ 98 கோடி
2025 – 2026,₹ 44.6 கோடி,₹ 9.6 கோடி,₹ 36 கோடி,₹ 58.78 கோடி,₹ 163 கோடி












