Advertisement

மறைமலைநகரில் ஏற்கனவே மூடப்பட்ட மதுபானக் கடையை மீண்டும் திறக்க முயற்சி: பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் கடந்த மார்ச் மாதம் நிரந்தரமாக மூடப்பட்ட அரசு மதுபானக் கடையை (கடை எண்: 4381) அதே இடத்தில் மீண்டும் திறக்க அதிகாரிகள் முயற்சிப்பதாகப் பரவிய தகவலைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் தேவாலயப் பிரதிநிதிகள் இணைந்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மறைமலைநகர் பாவேந்தர் சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்துத் தரப்பு மக்களும் வழிபடக்கூடிய விண்ணரசி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வார நாட்களில் காலை, மாலை வேளைகளிலும், ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் நாள் முழுவதும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் அனைத்து மதத்தினரும் பெருமளவில் பங்கேற்பது வழக்கம். இந்த ஆலயத்திற்கு மிக அருகிலேயே அரசு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வந்ததால், ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அருகில் உள்ள அரசுடைமை வங்கி, வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்பு வாசிகளுக்குப் மிகப்பெரும் இடையூறுகளும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவி வந்தது.

Advertisement

பொதுமக்களின் இந்த நீண்ட நாள் தொல்லையை நீக்க வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுமக்களோடு இணைந்து பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன் விளைவாக, கடந்த 2026 மார்ச் 9-ஆம் தேதியன்று இந்த மதுபானக் கடையை நிரந்தரமாக மூடுவதாகவும், அதனை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதாகவும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி அந்த மதுக்கடையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடை மூடப்பட்டு 3 மாத காலமே நிறைவடைந்துள்ள சூழலில், அதே இடத்தில் மீண்டும் அந்த மதுபானக் கடையைத் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் விண்ணரசி தேவாலய பங்குத்தந்தை ஆகியோர் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் மீண்டும் திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படும் அந்த மதுபானக் கடையின் முன்பு திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் மீண்டும் மதுக்கடையைத் திறந்தால், அது பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, அப்பகுதியில் கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும் என்பதால் இதற்கு எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என அவர்கள் முழக்கமிட்டனர்.

Advertisement

இப்போராட்டம் குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், “தற்போதைய தவெக அரசு வழிபாட்டுத் தலங்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அருகே உள்ள மதுபானக் கடைகளை அகற்றுவதாகக் கூறிவிட்டு, ஏற்கனவே அகற்றப்பட்ட தேவாலயத்திற்கு அருகிலேயே மீண்டும் கடையைத் திறக்க அனுமதிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை எங்களின் எதிர்ப்பையும் மீறி மீண்டும் இங்கு மதுபானக் கடை திறக்கப்பட்டால், அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டி மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்” எனத் தெரிவித்தனர்.

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement